செய்திகள்

தாராபுரம் அருகே அரளி விதை தின்று போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

Published On 2018-09-14 09:48 GMT   |   Update On 2018-09-14 09:48 GMT
தாராபுரம் அருகே பல்வேறு வழக்கு உள்ளதால் அச்சம் அடைந்த போலீஸ்காரர் அரளி விதை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம்:

பழனி ஆயக்குடியை சேர்ந்தவர் ரங்கநாயகம். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.

இதற்கு முன்பு ரங்கநாயகம் உடுமலையில் வேலை பார்த்தார். அப்போது அவர் விசாரணை கைதியை கடுமையாக தாக்கியதாக வழக்கு உள்ளது. இதேபோல் குண்டடம் பகுதியில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு உள்ளது. இதனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தவிர போலீஸ்காரர் ரங்கநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜூடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

விசாரணை முடிவில் தனது வேலை பறிபோகும் என்று ரங்கநாயகம் அச்சமடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று அரளி விதையை அரைத்து குடித்தார். இதில் மயங்கிய அவரை உறவினர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News