செய்திகள்

பூண்டி ஏரி மதகுகள் ரூ.40 லட்சம் செலவில் சீரமைப்பு

Published On 2018-09-12 07:09 GMT   |   Update On 2018-09-12 07:09 GMT
தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.40 லட்சம் நிதியை கொண்டு பூண்டி ஏரி மதகுகளை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதன் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

760 சதுரமைல் நீர் வரத்து பரப்பளவு கொண்ட அணையில் 16 மதகுகள் (‌ஷட்டர்கள்) உள்ளன. ஒவ்வொன்றும் 40 அடி அகலமும், 15 அடி நீளமும் கொண்டது. இந்த ‌ஷட்டர்கள் வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 1.20 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

கோடை வெயில் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்கீழ் கண்டலேறு அணையிலிருந்து நீர்வரத்து இல்லாததால் தற்போது பூண்டி அணை வறண்டு காணப்படுகிறது.

இந்த நிலையில் பல வருடங்களாக சீரமைக்கப்படாத காரணத்தால் சில மதகுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து மதகுகளையும் சீரமைக்க அரசு ரூ.40 லட்சம் ஒதுக்கியது.

இந்த நிதியை கொண்டு மதகுகள் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News