செய்திகள்

ரூ.3 கோடி செலவில் 4 பூங்காக்கள் - ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2018-09-11 17:47 GMT   |   Update On 2018-09-11 17:47 GMT
கோவை விளாங்குறிச்சி, காளப்பட்டி பகுதிகளில் ரூ.3 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்ட 4 பூங்காக்களை ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சரவணம்பட்டி:

கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி, காளப்பட்டி பகுதிகளில் ரூ.3 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 4 பூங்காக்களின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன், மண்டல பொறியாளர்கள் சரவணக்குமார், பார்வதி, உதவி பொறியாளர் ஜீவராஜ், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோவை மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராம், காளப்பட்டி பகுதி செயலாளர் ராஜேந்திரன், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில் கார்த்திகேயன், எஸ்.ஆர்.அர்ஜூனன், சால்ட் வெள்ளிங்கிரி ஆகியோர் வரவேற்றனர். கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூங்காவினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இப்பகுதி மக்கள் இங்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் எடுத்து கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அதனைதொடர்ந்து பூங்காவில் இறகு பந்து விளையாடிய அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள், நீரூற்று, புல்வெளி, நடைபாதை ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் கோவை மாநகராட்சி 34-வது வார்டு இளங்கோ நகர், 35-வது வார்டு பி.எல்.எஸ்.நகர், 36-வது வார்டு மகாராஜா நகர் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காக்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குறிஞ்சிமலர் பழனிசாமி, குபேந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் அசோக்பாபு, சம்சுதீன், மாணிக்கம், கோபால்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News