செய்திகள்

கோத்தகிரியில் கடுங்குளிருடன் நீர்பனி - விவசாயிகள் அச்சம்

Published On 2018-09-10 10:59 GMT   |   Update On 2018-09-10 10:59 GMT
கோத்தகிரியில் நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி:

கோத்தகிரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஓரிரு மாதங்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். மழை காலங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி மகசூல் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 3 மாதங்களாக பெய்தது. இதனால் கோத்தகிரி பகுதிகளிலும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். மழை ஓய்ந்த நிலையில் தற்போது கோத்தகிரியில் நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளது. நீர்பனியில் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

வருடந்தோறும் செப்டம்பர் இறுதி வாரத்தில் தான் நீர்பனி விழும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாக நீர்பனி பெய்ய தொடங்கி உள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

நீர்பனியால் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குளிரும் அதிகரித்துள்ளது. அதிகாலையில் குளிரின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. குளிரின் காரணமாக ஸ்வெட்டர், சால்வை மற்றும் ஜெர்கின் போன்ற வெம்மை ஆடைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News