செய்திகள்

பெரியகுளம் அருகே கிடப்பில் போடப்பட்ட கண்மாய் தூர்வாரும் பணி

Published On 2018-09-07 09:32 GMT   |   Update On 2018-09-07 09:32 GMT
பெரியகுளம் அருகே கண்மாய் தூர்வாரும் பணி கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் மூலம் சுற்றுவட்டார பகுதிகளான ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த கண்மாயை தூர்வார அரசு நிதி ஒதுக்கியது. அதற்காக பணிகளும் தொடங்கியது. அதன்பின்பு பணி கிடப்பில் போடப்பட்டது. மழை பெய்ததால் கண்மாய் நிரம்பியது. இதன் மூலம் அருகில் உள்ள குளத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தண்ணீரை பயன்படுத்தினர்.

தற்போது கண்மாய் முற்றிலும் வறண்டு விட்டது. ஒரு சில விவசாயிகள் மோட்டார் மூலம் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் தூர்வாரும் பணி மீண்டும் நடைபெறாததால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கி விடும். அதன்பின்பு கண்மாயிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். எனவே அதற்கு முன்பு கண்மாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News