செய்திகள்

கருப்பு பணம் சேர்ப்பது பாவத்திற்கு சமமானது- கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

Published On 2018-09-07 07:20 GMT   |   Update On 2018-09-07 07:20 GMT
கருப்பு பணம் சேர்ப்பது, கொள்கையில்லா அரசியல் உள்ளிட்ட 7 விஷயங்கள் பாவத்திற்கு சமமானது என்று கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
கரூர்:

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தேவாப்பூர் பகுதியில் உள்ள இன்பசேவா சங்க பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

ஜவஹர்லால் நேருவும், பூமி தான இயக்க தலைவருமான வினோபாஜியும் நெருங்கிய நண்பர்கள். வயதில் இளையவரான நேரு அப்போது வினோபாஜியை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். வினோபாஜியின் கொள்கைப்படி இந்த சேவா சங்கம் நிறுவப்பட்டுள்ளது.

என்னை பொறுத்தவரை 7 வி‌ஷயங்களை பாவமாக கருதுகிறேன். புகைபிடிப்பது, மதுஅருந்துவது, கருப்பு பணம் சேர்ப்பது, கொள்கையில்லா அரசியல், அறிவியலை அழிவுக்கு பயன்படுத்துதல், உழைப்பில்லாத செல்வம், தியாகம் இல்லாத மதவழிபாடு இவைகள்தான்.

எந்த மதத்தினர் ஆனாலும் சரி, இரவு தூங்கும் முன்பு இந்துவாக இருந்தால் பகவத் கீதையையும், கிறிஸ்தவராக இருந்தால் பைபிளையும், முஸ்லிமாக இருந்தால் குரானையும் படித்து விட்டு தூங்க வேண்டும். இதன் மூலம் ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மீகத்தில் ஊறி வரும் போது தவறுகள் செய்ய வாய்ப்பில்லை.

காந்தி வாழ்நாள் முழுவதும் சைவத்தை கடைபிடித்தார். நானும் சைவத்தை பின்பற்றுகிறேன். அசாமில் கவர்னராக இருந்த போதும் சைவ உணவுகளையே சாப்பிட்டேன். ஆனால் இங்கு தமிழகத்திற்கு வரும் போது அது சாத்தியமில்லை என்றனர். ஆனால் இங்கு வந்த பிறகும் சைவத்தைதான் பின்பற்றுகிறேன்.

ஜனாதிபதி, பிரதமர் யார் வந்தாலும் ராஜ்பவனில் சைவ சாப்பாடுதான். என்னை பொறுத்தவரை சாத்தியம் இல்லாதது எதுவுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம், கரூர் மாவட்டத்தில் மாதிரி கிராமத்தை தேர்ந்தெடுத்து திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்புங்கள். அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த கிராமத்திற்கு தேவையான கட்டமைப்புகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமை நிலைய செயலாளர் ராஜகோபால், கீதா எம்.எல்.ஏ., இன்பசேவா சங்க தலைவர் முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.


முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கரூருக்கு இன்று காலை வருகை தந்தார். அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர் னரை வரவேற்றனர்.

இன்று மதியம் கரூர் விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் பொது மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

பின்னர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்று மாலை 5 மணியளவில் மூக்கணாங்குறிச்சியில் உள்ள தடுப்பணை மற்றும் தனிநபர் இல்ல கழிவறையின் பயன்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார். இதைத் தொடர்ந்து வீரணாம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

அதன் பின்னர் 5.30 மணியளவில் கரூர் பஸ் நிலையத்திற்கு வந்து தூய்மை இந்தியா இயக்க திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மை பணியை மேற்கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று விட்டு கரூரில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் கரூர் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கரூர் நகரமே கவர்னரின் வருகையால் பளிச்சென்று காணப்பட்டது. நகரின் எந்த பகுதியிலும் குப்பைகள் காணப்படவில்லை. #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News