செய்திகள்

திண்டுக்கல் அருகே நடு வழியில் நின்ற சரக்கு ரெயில் பயணிகள் தவிப்பு

Published On 2018-09-05 11:19 GMT   |   Update On 2018-09-05 11:19 GMT
திண்டுக்கல் அருகே நடு வழியில் சரக்கு ரெயில் நின்றதால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

வடமதுரை:

சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சரக்கு ரெயில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. அய்யலூரை அடுத்துள்ள கல்பட்டிசத்திரம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென தண்டவாளத்தில் நின்றது.

புத்தாநத்தம் பிரிவு லெவல் கிராசிங்கில் ரெயில் நின்றதால் வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர். ரெயிலில் அதிக பாரம் இருந்ததால் அதனை இழுக்க முடியாமல் நடு வழியில் நின்றது தெரிய வந்தது.

இதனையடுத்து மற்றொரு என்ஜின் ரெயில் வரவழைக்கப்பட்டு ரெயிலின் பின்னால் அழுத்தம் கொடுக்கப்பட்டு சரக்கு ரெயில் அங்கிருந்து நகர்த்தப்பட்டது.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், சரக்கு ரெயிலில் அதிக பாரம் ஏற்றி வரும்போது இதுபோன்ற சம்பவம் நடந்து விடுகிறது. அதற்காக இப்பகுதியில் 2-வது ரெயில்பாதை அமைக்கப்பட்டது. மேடான பகுதி என்பதால் சரக்கு ரெயில் பாரம் இழுத்து செல்ல முடியாமல் இன்று நின்று விட்டது.

அதன் பிறகு மீண்டும் அதனை திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம் என்றனர். இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

Tags:    

Similar News