செய்திகள்

குப்பாங்கரை அரசு பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலநிலை

Published On 2018-08-27 17:07 GMT   |   Update On 2018-08-27 17:07 GMT
குப்பாங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை வசதி இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகள் மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே குப்பாங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை வசதி இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகள் மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா விற்கு உட்பட்ட குப்பாங் கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. 

இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 90 மாணவர்கள் பயின்று வருகின்றனர். குப்பாங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள்  இப்பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை இப்பள்ளியில் மொத்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக இருந்து வந்தது. இதனாபல் இந்த பள்ளி ஆசிரியர்களின் கடும் முயற்சிக்கு பின்னர் நடப்பாண்டில் 90 மாணவர்களாக கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

இந்த பகுதியை சேர்ந்த பெற்றோர்களும் குப்பாங்கரை அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியின் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால் மீண்டும் மாணவர்கள் எண்ணிக்கை குறையுமோ என்ற அச்சம் பெற்றோர்கள் இடையே நிலவுகிறது. இது குறித்து குப்பாங்கரை பகுதியில் உள்ள மக்கள் கூறியதாவது:-

 குப்பாங்கரை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் மட்டுமே இயங்கி வருகிறது. அதையொட்டி கட்டிடத்தில் இருந்த வகுப்பறை கட்டிடம் பழுதடைந்து விட்டதால் அங்குள்ள 2 வகுப்பறைகள் பள்ளியின் மரத்தடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது.

இதனால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த  கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள மின் கம்பத்தையும் இட மாற்றம் செய்ய வேண்டும். பள்ளி முன் உள்ள பாறைகளால் தொடக்கபள்ளி குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News