செய்திகள்

மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம் - அன்புமணி ராமதாஸ்

Published On 2018-08-23 05:56 GMT   |   Update On 2018-08-23 05:56 GMT
முக்கொம்பு மேலணையின் மதகுகள், பாலம் உடைவதற்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மணல் கொள்ளை தான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். #Mukkombu #AnbumaniRamadoss
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் வரும் கூடுதல் நீரை கொள்ளிடத்தில் திருப்பி விடுவதற்காக மேலணை கட்டப்பட்டிருக்கிறது.

மேலணை அதிக காலம் உழைத்து பழமையாகி விட்டதாலும், வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றதால் ஏற்பட்ட அரிப்பு காரணமாகவும் தான் அணை உடைந்தது என்றும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்கமளிக்கப்படுகிறது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் ஆகும். மேலணையை பராமரிப்பதில் தமிழக அரசின் தோல்வியையும், மணல் கொள்ளை ஊழல்களையும் மறைக்கவே இத்தகைய விளக்கம் அளிக்கப்படுகிறது.

மேலணையின் மதகுகளும், பாலமும் உடைந்ததற்கு அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கண்மூடித்தனமான மணல் கொள்ளை தான் என வெளிப்படையாகவே நான் குற்றம்சாட்டுகிறேன்.


மேலணைக்கு அருகிலுள்ள மண்ணச்சநல்லூர் கரியமாணிக்கம் பகுதியில் பல ஆண்டுகளாகவே மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அதேபோல், மண்ணச்சநல்லூருக்கு அருகிலுள்ள திருவாசி, கிளியநல்லூர் ஆகிய இடங்களிலும் மணல் குவாரிகள் உள்ளன. இவை தவிர பல இடங்களில் சட்டவிரோத மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் 30 முதல் 40 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் தான் மதகுகளின் கீழ் அரிப்பு ஏற்பட்டு அவை உடைந்துள்ளன.

கொள்ளிடத்தில் வினாடிக்கு 8000 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால் இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மேலணையின் மதகுகள் சீரமைக்கப்படுவதற்கு முன்பாக கொள்ளிடத்தில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் பேரழிவு ஆபத்து உள்ளது.

எனவே, தமிழகத்திலுள்ள அணைகள், தடுப்பணைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் அனைத்து ஆறுகளிலும் ஆற்று மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும். அனைத்து பொதுப்பணித்துறை கட்டமைப்புகளின் வலிமையையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக மணல் கொள்ளையை ஊக்குவித்து மேலணை உடைந்ததற்கு மறைமுகக் காரணமாக இருந்த தமிழக முதல்-அமைச்சரும், பொதுப்பணி அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உடனே பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mukkombu #AnbumaniRamadoss
Tags:    

Similar News