செய்திகள்

நெகமம் பகுதியில் மழை: நிலக்கடலை சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் வேதனை

Published On 2018-08-19 11:41 GMT   |   Update On 2018-08-19 11:41 GMT
நெகமம் பகுதியில் மழை பெய்து வருவதால் நிலக்கடலை செடிகள் அழுகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெகமம்:

நெகமம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிப்படைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் நெகமம் மற்றும் அதன் சுற்று பகுதியில் கடும் வறட்சி நிலவியது.இதனால் தென்னை மரங்கள் காய்ந்து, காய்ப்பு திறனை இழந்தது. மேலும் கிணறு, ஆழ்துளை கிணறுகள் வறண்டன. இதனால் விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிர்வகை மற்றும் அனைத்து வகையான விவசாயமும் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். விளை நிலங்களில் வெறும் மண் மட்டுமே காணப்பட்டது.

பசுந்தீவனம் இல்லாததால் தாங்கள் வளர்த்து வந்த பசுமாடு, காளை மாடுகளை விற்பனை செய்து வந்தனர். ஒரு சில விவசாயிகள் பால் தேவைக்காக தீவனங்களை விலைக்கு வாங்கி மாடுகளுக்கு போட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யததால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களை உழுது நிலக்கடலை, சோளம், கம்பு, மக்காச்சோளம், பொறியல் தட்டை, கத்தரி, மிளகாய், பாகற்காய், அவரை, போன்ற பயிர் வகைகள் விவசாயம் செய்து உள்ளனர்.

செட்டியக்காபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்குகாடு, சேரிபாளையம், குருநல்லிபாளையம், ஆண்டிபாளையம், தேவணாம்பாளையம், கோதவாடி, குளத்துப்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலக்கடலை செடிகள் அழுகிய நிலையில் உள்ளது. மேலும் நிலக்கடலை செடியில் அப்படியே மீண்டும் முளைத்து விடும் நிலையில் உள்ளது. இதனால் நிலக்கடலை செடிகள் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து விவசாயி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது-

தற்போது நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் 90 நாட்களில் விளைச்சல் தரக்கூடிய நிலக்கடலையை அதிகளவில் சாகுபடி செய்தோம். 90 நாட்களுக்கு பிறகு நிலக்கடலை செடியை பிடிங்கி அதிலிருந்து நிலக்கடலையை பறித்து விட்டு, அதன் செடிகளை மாடுகளுக்கு உணவாக வழங்க வைத்துக்கொள்வோம். நிலக்கடலையை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து விடுவோம். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலக்கடலை செடிகள் அழுகி விட்டது. நிலக்கடலையும் பறிக்க முடியாமல் மண்ணில் ஒட்டிக்கொண்டு உள்ளது. இதனால் நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் இந்த ஆண்டு பெரும் வேதனை அடைந்து உள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News