செய்திகள்

வைகை ஆறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2018-08-19 01:48 GMT   |   Update On 2018-08-19 02:26 GMT
வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தேனி, மதுரையில் ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு இன்று 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #VaigaiDam
மதுரை :

கேரளாவிலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது.

பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக நேற்று உயர்ந்தது. தற்போது, மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையில் நீர் அதிகரிப்பால் நேற்று முன்தினம் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைகை அணையின் முழு கொள்ளவான 71 அடியில் 68. 60 அடி நீர் நிரம்பியுள்ளது.

இதனால், இன்று 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வைகை ஆறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளதாவது :-

வைகை அணையின் முழு கொள்ளவான 71 அடியில் 68. 60 அடி நீர் நிரம்பியுள்ளதால், வைகை அணையை திறக்கும் போது தேனி, மதுரையில் வைகை ஆறு கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம்.

ஆற்றின் அருகே கால்நடைகளின் மேய்ச்சலை தவிர்க்கவும். வைகை அணையில் நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #VaigaiDam
Tags:    

Similar News