செய்திகள்

தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் 3 உண்டியல்களை உடைத்து கொள்ளை

Published On 2018-08-14 11:25 GMT   |   Update On 2018-08-14 11:25 GMT
தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் 3 உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தாடிக்கொம்பு:

தாடிக்கொம்பு சவுந்தர ராஜபெருமாள் கோவிலில் வருடம் முழுவதும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இக்கோவிலில் பரிகார மூர்த்தியாக விளங்கும் சொர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் நடக்கும் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோவிலில் நாள் தோறும் அன்னதானமும் நடந்து வருகிறது. நேற்று ஆடி பூரம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு வரை பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இன்று காலையில் அர்ச்சகர்கள் கோவிலுக்கு வந்தபோது 3 உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. கோவிலில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமிராவை வைத்து பதிவான வீடியோவை போலீசார் பார்த்தனர்.

முகமூடி அணிந்த வாலிபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து கேமிராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுவரை இல்லாத சம்பவமாக தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News