செய்திகள்

பள்ளியை தரம் உயர்த்த கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2018-08-13 14:15 GMT   |   Update On 2018-08-13 14:15 GMT
மணப்பாறையில் பள்ளியை தரம் உயர்த்த கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம்  மணப்பாறை  மருங்காபுரி ஒன்றியம் திருநெல்லிபட்டி  ஊராட்சி கார்வாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 143 மாணவ-மாணவிகள் படித்து  வருகிறார்கள். இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முடித்த  மாணவர்கள் மேற்படிப்புக்காக சுமார் 5 கி.மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு  தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த   நடுநிலைப்பள்ளியை  உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கிராம மக்கள் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு கல்விதொகை  வழங்கப்பட்டது.

ஆனால் இதுவரை பள்ளி தரம்  உயர்த்த படவில்லை. இந்நிலையில் இந்த பள்ளிக்கு அருகே  உள்ள மற்றொரு பள்ளி தரம் உயர்த்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்வாடி ஊராட்சி பள்ளி மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள், கிராம மக்கள் ஆகியோர் இன்று காலை பள்ளியை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளியை உடனே தரம் உயர்த்த கோரி கோஷம் போட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் கோட்டாச்சியர் பொன்ராமர், மணப்பாறை  டி.எஸ்.பி. ஆசைதம்பி மற்றும் புத்தாநத்தம் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Tags:    

Similar News