செய்திகள்

ஒரு லட்சம் கோடி ரூபாயில் ஊழலை ஒழிக்க திட்டம் - கமல்ஹாசன் தகவல்

Published On 2018-08-06 06:50 GMT   |   Update On 2018-08-06 06:50 GMT
ஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடித்த விஸ்வரூபம்-2 படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இதற்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற வேண்டும். அதற்கு ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதே எனது முக்கிய நோக்கம். அதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் வகையில் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன்.



அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தால் மாநிலத்தில் நிலவும் லஞ்ச, ஊழலை அடியோடு ஒழித்து விடலாம். தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மேம்படுத்துவதே எனது முழுநேர பணியாக இருக்கும். எனக்கு இதைவிட சினிமா முக்கியம் அல்ல.

நடிப்பு திறமை அரசியலுக்கு உதவுமா என்று கேட்கிறீர்கள், விலங்குகளுக்கு கூட நடிப்பு திறமை இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்கின்றன.

நடிப்புத் திறமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பலன் அடையும் போது, அதை ஏன் அரசியல்வாதிகள் மட்டும் பயன்படுத்தக்கூடாது? எனக்கு கிராமப்பகுதிகளில் தான் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு என்னை சினிமா நபராக தான் அதிகம் தெரியும். அவர்கள் என்னை ஒரு சினிமாக்காரனாக மட்டும் அல்லாமல் அரசியல்வாதியாகவும் ஏற்றுக்கொள்வார்கள்.

அந்த நம்பிக்கையை அவர்களுக்கு உண்டாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதை நோக்கி பணிபுரிவேன் அதன்மூலம் நடிகனாக எனக்கு அவர்கள் தந்த அன்பையும் ஆதரவையும் அரசியல்வாதியாகவும் தரும் அளவிற்கு பணிபுரிவேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

Tags:    

Similar News