செய்திகள்

அண்ணா பல்கலை. மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்பில் ஊழல் - தனியார் நிறுவனத்திடம் போலீஸ் விசாரணை

Published On 2018-08-06 06:22 GMT   |   Update On 2018-08-06 06:22 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்பில் ரூ.62 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். #AnnaUniversity #RevaluationScam
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு மே-ஏப்ரல் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வின் போது தேர்வுத்தாள் மறு மதிப்பீடுகள் நடந்தபோது பணம் வாங்கிக் கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு தேர்வுத்தாளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வாங்கிக் கொண்டு கூடுதல் மதிப்பெண் அளித்துள்ளனர். சுமார் 45 ஆயிரம் மாணவர்களிடம் இப்படி பணம் வாங்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது தொடர்பாக 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். அவர்களது முதல் கட்ட விசாரணையில் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 6 செமஸ்டர்களில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்து இருப்பதாக கருதப்படுகிறது.



இந்த கால கட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர் உமா. இவரை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் உமா அதிகாரியாக இருந்த அதே காலக்கட்டத்தில் மதிப்பெண் பட்டியல் அச்சிட்டு தயாரிப்பதிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்பதற்காக ரூ.84.71 கோடியை அண்ணா பல்கலைக்கழகம் செலவு செய்துள்ளது. இதில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட ரூ.62.34 கோடி கொடுத்துள்ளனர்.

இதற்கு அனுமதி கொடுத்தது, பணம் கைமாறியது உள்பட எதிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்காக மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குறைந்த செலவில் பாதுகாப்பு அம்சங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து வழங்க முடியுமா? என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 9 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதினார்.

அந்த 9 நிறுவனங்களும் எவ்வளவு தொகைக்கு அச்சிட்டு தர முடியும் என்பதை 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் தர வேண்டும் என்று அவர் தேதி நிர்ணயம் செய்திருந்தார். செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை 3 நிறுவனங்கள் மட்டுமே இதற்கு பதில் அளித்திருந்தன.

ஆனால் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா அந்த 3 நிறுவனங்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து தரும் ஒப்பந்தத்ததை கொடுக்கவில்லை. அதற்கு பதில், “இன்காக்னிடோ போரன்சிக் பவுண்டே‌ஷன்” எனும் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கினார். அந்த நிறுவனம் ஒப்பந்தம் பெற விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டே 15 நாட்கள் தான் ஆகியிருந்ததாம். இதுபற்றி செப்டம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக உயர்மட்டக் குழு அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, “5 நிறுவனங்கள் பதில் அளித்தன. 4 நிறுவனங்கள் பதில் அளிக்கவில்லை” என்றார்.

ஆனால் அவர் குறிப்பிட்ட 9 நிறுனங்களின் பெயர்களும் ஏற்கனவே ஒப்பந்தத்துக்காக விண்ணப்பித்த நிறுவனங்களுடன் ஒத்துப் போகவில்லை.

இதற்கிடையே 2016-ம் அண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்புக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்த தொகையை ஒப்பிட்டு ஒரு விபர அறிக்கையை தயாரித்தார். விண்ணப்பித்திருந்த எந்த நிறுவனத்துக்கும் அவர் ஒப்பந்தத்தை வழங்கவில்லை. அதற்கு பதில் புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தார்.

அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்ட சமயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிரேடு மதிப்பெண் சான்றிதழ்கள், புரவி‌ஷனல் சர்டிபிகேட், டிகிரி சர்டிபிகேட் போன்றவை தயாரிக்க 2 லட்சம் சான்றிதழ்களே தேவைப்பட்டன. ஆனால் 20 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிப்பதற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். கூடுதலாக 18 லட்சம் சான்றிதழ்களை ஒரு புதிய நிறுவனம் மூலம் இவ்வளவு கோடி செலவழித்து அச்சடிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர் கல்வித்துறை செயலாளர் சுனீல் பாலிவால் தலைமையிலான குழு இதுபற்றி ஆய்வு செய்தபோது ரூ.62 கோடி முறைகேடு அம்பலமானது.

இதையடுத்து உயர் கல்வித்துறை செயலாளர் சுனீல்பாலிவால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அனுப்பினார். 6 பக்கங்களில் அவர் மிக விளக்கமாக இந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

இது குற்றவாளிகளை உடனே நெருங்குவதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உதவியாக இருந்தது. தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். எனவே அடுத்தக்கட்டமாக கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AnnaUniversity #RevaluationScam

Tags:    

Similar News