செய்திகள்

கருணாநிதி பற்றி வதந்தி பரவியதால் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கம்

Published On 2018-07-30 12:22 GMT   |   Update On 2018-07-30 12:22 GMT
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் மிக குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
தருமபுரி:

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தவறான வதந்திகள் பரப்பப்பட்டன. இதனால் தருமபுரியில் நேற்று இரவு 9 மணிக்கே கடைகள் அடைக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை மாலையிலும், இரவிலும் சீனிவாசராவ் தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, பி.ஆர்.சுந்தரம் தெரு, முகமது அலி கிளப் ரோடு, பைபாஸ் ரோடு, 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். வதந்திகள் பரவியதால் நேற்று இரவு அந்த அளவுக்கு கூட்டம் இல்லை.

நேற்று இரவு தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் மிக குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது. வழக்கமாக திங்கட்கிழமை காலை தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் இருந்து பலர் பெங்களூருவுக்கு வேலைக்கு செல்வார்கள். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.

ஆனால் இன்று காலை பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் இல்லை. தனியார் பஸ்களில் மட்டுமே கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று காலை தொப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி டோல்கேட்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படும். ஆனால் இன்று வாகன நெரிசல் இல்லாமல் போக்குவரத்து சீராக இருந்தது. வாட்ஸ்அப்களில் பரவும் வதந்தியே இதற்கு காரணமாக இருந்தது.

பெங்களூருவில் வேலை பார்க்கும் தமிழர்கள் வெள்ளிக்கிழமை மாலை கார்களில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வந்துவிட்டு பெங்களூருவுக்கு திங்கட்கிழமை காலை செல்வார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பயணத்தை தவிர்த்து விட்டனர்.

இதேபோன்று இன்று காலை தருமபுரி டவுன் பஸ் நிலையம் மற்றும் ரூட் பஸ் நிலையத்தில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டவுன் பஸ் நிலையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அரசு பஸ் குறித்த நேரத்தில் வராததால் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களிலும் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News