செய்திகள்

பழனியில் வட்டமடிக்கும் ஹெலிகேமரா சமூக ஊடகங்களில் புகைப்படம் வெளியாவதால் பக்தர்கள் பீதி

Published On 2018-07-30 08:53 GMT   |   Update On 2018-07-30 08:53 GMT
பழனியில் பல்வேறு பகுதிகளில் வட்டமடிக்கும் ஹெலிகேமரா புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதால் பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. #Palanitemple

பழனி:

முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது உண்டு. இது போன்ற சமயங்களில் அசம் பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் ஆள் இல்லா குட்டி விமானத்தை பறக்க விட்டு கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

ஆனால் சமீப காலமாக பலர் பழனி நகரில் ஏதாவது ஒரு மாடியில் இருந்து ஹெலி கேமராவில் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

பழனி கோவிலில் ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், யானை பாதை, படிப்பாதை, மலைக்கோவில், அன்ன தானக்கூடம், பக்தர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

முக்கிய பண்டிகை நாட்களில் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு வருபவர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மற்ற நாட்களில் பக்தர்கள் வழக்கமாக சாமி தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை அறிந்து அங்கு ஏதேனும் அசம்பாவிதம் செய்வதற்கு இது போன்ற புகைப்படங்கள் வாய்ப்பாக உள்ளது.

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரிமாறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது போல வழிபாட்டுத் தலமான பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களும் கோவிலின் உட்கட்டமைப்பு புகைப் படங்கள் வெளியாவதால் தங்கள் பாதுகாப்பு என்ன ஆகுமோ? என அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பண்டிகை நாட்களிலும் முகூர்த்த நாட்களிலும் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். தனியார் சிலர் கோவில் அருகே உள்ள ஏதேனும் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து இது போன்ற புகைப்படங்களை எடுப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News