செய்திகள்

எர்ணாகுளம் - பெங்களூர் இண்டர்சிட்டி ரெயில் மீது கல்வீசிய மர்ம நபர்கள்

Published On 2018-07-30 06:29 GMT   |   Update On 2018-07-30 06:29 GMT
மதுக்கரை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஈச்சனாரியை கடந்த போது குளிர்சாதன பெட்டி மீது சில மர்மநபர்கள் கல்வீசினர். #Train

கோவை:

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகிறது.

ரெயில்கள் போத்தனூர், மதுக்கரை, பீளமேடு, வடகோவை, இருகூர் போன்ற பகுதிகளை கடந்து செல்லும் போது சில மர்மநபர்கள் ரெயில்கள் மீது மனித கழிவு மற்றும் கற்களை எடுத்து வீசும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

கல்வீச்சில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து செல்லும் பயணிகள் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அடிக்கடி வந்த புகாரின் பேரில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களுக்கு இண்டர்சிட்டி விரைவு ரெயில் புறப்பட்டது. ரெயில் நேற்று மதியம் 1 மணியளவில் மதுக்கரை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஈச்சனாரியை கடந்த போது குளிர்சாதன பெட்டி மீது சில மர்மநபர்கள் கல்வீசினர்.

இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.

இது குறித்து பயணிகள் பாலக்காடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரெயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் மர்ம நபர்களை பிடித்து கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இது குறித்து கோவை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் கூறியதாவது:-

ரெயில்கள் மீது கல்வீசும் மர்மநபர்களை பிடிக்க போலீசார் அடிக்கடி ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். சிங்காநல்லூரில் அடிக்கடி ரெயில் மீது கல்வீசும் சம்பவம் நடந்து வந்தது. இதனை தடுக்க அந்த பகுதியில் தண்டவாள பகுதி அருகே இருந்த டாஸ்மாக் பாரை மூடிவிட்டோம். திருப்பூரிலும் இதே போல தண்டவாளம் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையையும் மூடி உள்ளோம். மேலும் ரெயில்கள் மீது கற்களை வீச கூடாது எனவும், இதனை மீறி வீசினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News