செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் - போலீசார் அறிவுரை

Published On 2018-07-26 17:50 GMT   |   Update On 2018-07-26 17:50 GMT
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஊட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் அறிவுரை கூறினர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவிட்டார். அதன்படி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து போலீசார் கூறியதாவது:-

கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகிறார்கள். எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. போலீசாரின் சோதனையில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்குவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. செல்போன் பேசுவதில் கவனம் இருந்தால், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படக்கூடும். குடிபோதையில் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் இயக்கக்கூடாது. முக்கிய சந்திப்பு பகுதிகளில் மாணவர்கள் சாலையை கடக்கும் போது இருபுறமும் வாகனங்கள் வருகிறதா? என்பதை நன்கு கவனித்து செல்ல வேண்டும்.

கார்களை இயக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகனங்கள் வளைவுகளில் திரும்பும் போதும், நிறுத்தும் போதும் சிக்னல் செய்ய வேண்டும். அப்போது தான் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அதற்கு ஏற்றவாறு வாகனத்தை இயக்க முடியும். பள்ளி மாணவர்கள் கையில் தான் எதிர்காலம் உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும்.

மேலும் உங்களது பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு போக்குவரத்து விதிகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News