செய்திகள்

திருப்பூரில் போலி கையெழுத்து போட்டு ரூ.1½ கோடி மோசடி - மானேஜர் கைது

Published On 2018-07-21 08:28 GMT   |   Update On 2018-07-21 08:28 GMT
திருப்பூரில் வங்கி அதிகாரி உடந்தையுடன் போலி கையெழுத்து போட்டு ரூ.1½ கோடி மோசடி செய்த மானேஜரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #fakehandwriting

திருப்பூர்:

திருப்பூர் அவினாசி ரோட்டில் பெரிய அளவில் பனியன் கம்பெனி நடத்தி வருபவர் பழனிசாமி. இவரது கம்பெனியில் நிர்வாக மானேஜராக கிருபா பாஸ்கரன்(வயது 27) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

அதே கம்பெனியில் விஜயலட்சுமி(31), குணமாள், கிருஷ்ணராஜ் (52) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றினர்.

கடந்த 2015 முதல் இந்த மாதம் 5-ந் தேதி வரை வரவு செலவு கணக்குகளை கவனித்து வந்தனர். கோடிக்கணக்கில் வரவு செலவு இருந்தது.

இந்நிலையில் கணக்கில் ஏதோ மாற்றம் இருப்பதை அறிந்த பனியன் கம்பெனி உரிமையாளர் பழனிசாமி அனைத்து வங்கி வரவு, செலவுகளையும் ஆராய்ந்தார். அப்போது தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் கேட்டபோது, அவரும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பனியன் அதிபர் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மானேஜர் கிருபா பாஸ்கரன், ஊழியர் கிருஷ்ணராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மோசடியில் தொடர்புடைய பெண் ஊழியர்கள் விஜயலட்சுமி, குணமாள் மற்றும் வங்கி அதிகாரியை போலீசார் தேடி வருகிறார்கள். #fakehandwriting

Tags:    

Similar News