செய்திகள்

திருச்சி கே.கே.நகரில் விளையாட்டு உபகரண கடையில் கொள்ளையடித்த வாலிபர் கைது

Published On 2018-06-24 17:14 GMT   |   Update On 2018-06-24 17:14 GMT
விளையாட்டு உபகரண கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கே.கே.நகர்:

திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 39), இவர் அதே பகுதியில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இரவு வழக்கம் போல் வியாபாரத்தினை முடித்து விட்டு கடையினை பூட்டி சென்றார். காலை கடையில் கொள்ளை நடந்திருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் முன்பக்க கதவின் (சட்டர்) பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது.

இது குறித்து அவர் கே.கே. நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உப கரணங்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. 

இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந் நிலையில் கே.கே.நகர் அய்யப்பநகரை சேர்ந்த ராஜா (வயது 18) என்பவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து விளையாட்டு பொருட்கள், ரூ. 4 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜாவிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News