செய்திகள்

புழல் ஜெயிலில் இருந்து மேலும் 47 ஆயுள் கைதிகள் விடுதலை

Published On 2018-06-20 05:27 GMT   |   Update On 2018-06-20 05:27 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்த மேலும் 47 கைதிகள் புழல் ஜெயிலில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
செங்குன்றம்:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறைச் சாலைகளில் 10 ஆண்டு சிறை தண்டனை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

முதல்கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து கடந்த 6-ந் தேதி 67 ஆயுள்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி 2-வது கட்டமாக 52 கைதிகள் விடுதலை ஆனார்கள்.

இந்த நிலையில் இன்று 3-வது கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆண் கைதிகள் 43 பேர், பெண் கைதிகள் 4 பேர் என மொத்தம் 47 பேர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

அவர்களை வரவேற்று அழைத்து செல்ல உறவினர்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே சிறைவாசல் முன்பு குவிந்து இருந்தனர். சிறையில் இருந்து வந்த அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர். சிலர் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டனர்.

விடுதலையானவர்கள் வெளியில் சென்று சுய தொழில் செய்வதற்காக தனியார் தொண்டு நிறுவனத்தினர் உபகரணங்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. முருகேசன், ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விடுதலையானவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News