செய்திகள்

சென்னையில் 6 நாட்கள் போலீஸ் வேட்டை: 6 ஆயிரம் பேர் கைது

Published On 2018-06-17 11:28 GMT   |   Update On 2018-06-17 11:28 GMT
சென்னையில் 6 நாட்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் போலீஸ் வேட்டையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சுமார் 600 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

சென்னையில் மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் பெண்களிடம் நகை பறிப்பதும், செல்போன்களை அபகரித்து செல்வதும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

சமீபகாலமாக ரோட்டில் நடந்து செல்பவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே சென்றால் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து சென்று விடுகிறார்கள்.

கடந்த 10-ந்தேதி ஒரே நாளில் 19 பேரிடம் நகைகள், செல்போன்கள் பறிக்கப்பட்டன. போலீஸ் அதிகாரி ஒருவரிடமும் செல்போன் பறித்து சென்று விட்டனர். இதையடுத்து சென்னையில் அதிகரிக்கும் நகை, செல் போன்கள் பறிப்பை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன்படி கூடுதல் துணை கமி‌ஷனர், உதவி கமி‌ஷனர் ஆகியோர் தலைமையில் தலா 30 பேர் கொண்ட போலீஸ் படை ஒவ்வொரு பகுதிக்கும் அமைக்கப்பட்டது. அவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் 4 மணி முதல் 8 மணி வரையும் 2 கட்டமாக சோதனையில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 11-ந்தேதி முதல் சென்னையில் போலீஸ் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

முதல்நாள் போலீசார் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் 750 லாட்ஜுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் அன்று ஒருநாள்மட்டும் போலீசார் வேட்டையில் 3 ஆயிரம் பேர் பிடிபட்டனர். அவர்களில் 1100 பேர் ரவுடிகள் ஆவார்கள்.

12-ந்தேதி நடந்த சோதனையில் சுமார் 500 பேரும், 13-ந்தேதி 550 பேரும், 14-ந்தேதி 600பேரும், 15-ந்தேதி 580 பேரும் போலீஸ் வேட்டையில் சிக்கினார்கள். நேற்றிரவு நடந்த போலீஸ் வேட்டையில் 116 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தத்தில் கடந்த 6 நாட்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் போலீஸ் வேட்டையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சுமார் 600 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக போலீசார் நடத்திய வேட்டையில் பெரும்பாலும் முக்கிய ரவுடிகள் பிடிபட்டு விட்டனர். போலீஸ் வேட்டையை கண்டு உஷாரான சில ரவுடிகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று விட்டனர். சில ரவுடிகள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக சென்னையில் நடந்து வந்த குற்ற செயல்கள் கனிசமாக குறைந்து வருகின்றன. குறிப்பாக நகை பறிப்பு, செல்போன் பறிப்பு குறைந்து உள்ளது.

நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் நேரடியாக களத்தில் இறங்கி போலீஸ் வேட்டையை கண்காணித்தார். அதற்கு பலன் அளிக்கும் வகையில் குற்ற செயல்கள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Tags:    

Similar News