செய்திகள்

மேட்டூர் அணையை திறக்க இயலாது என அறிவிப்பு - சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு

Published On 2018-06-08 07:47 GMT   |   Update On 2018-06-08 07:47 GMT
மேட்டூர் அணையை 12-ந்தேதி திறக்க முடியாது என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin #TNAssembly #Walkout
சென்னை:

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்க இயலாது என்றும் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இதற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் காமராஜ் பேச முற்பட்டார். அதற்கு துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் வாசித்த பிறகு அதன்மீது எந்த விவாதமும் கூடாது என்று சபாநாயகர் எடுத்துக் கூறினார்.

ஆனால் சபாநாயகர் கூறுகையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதும் அதன்மீது விவாதம் தான் கூடாது, நன்றி சொல்லலாம் என்றார்.

இதனால் துரை முருகனுக்கும், சபாநாயகருக்கும் 10 நிமிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் சபாநாயகர் தி.மு.க. ஆட்சியின் போது நடந்த சம்பவங்களை விளக்கி கூறி அப்போதும் நன்றி சொல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றார்.



இதைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து மேட்டூர் அணையை 12-ந்தேதி திறக்க முடியாது என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதைதொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினுடன் வெளி நடப்பு செய்தனர். #DMK #MKStalin #TNAssembly #Walkout

Tags:    

Similar News