செய்திகள்

சங்கரன்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

Published On 2018-05-27 16:22 GMT   |   Update On 2018-05-27 16:22 GMT
சங்கரன்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நர்பகள் திருடிச் சென்றனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி மனைவி லட்சுமி (வயது 45). இவர் வீட்டின் தேவைக்காக தன்னிடம் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகளை விற்க திட்டமிட்டார்.

இதையடுத்து பனவடலிசத்திரத்திலிருந்து பஸ்சில் சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளார். தங்க செயின் மற்றும் மோதிரம் உள்ளிட்ட 52 கிராம் தங்க நகைகளையும், 130 கிராம் வெள்ளி பொருள்களையும் ஒரு சிறிய பர்சில் வைத்து கையில் உள்ள பையில் வைத்து கொண்டு வந்துள்ளார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர் லட்சுமியின் பையில் இருந்த பர்சை நைசாக திருடி விட்டதாக கூறப்படுகிறது.

சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய லட்சுமி பையில் வைத்திருந்த பர்சை காணாது திடுக்கிட்டார். சம்பவம் பற்றி லட்சுமி அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருட்டு போன நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ. 75ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News