செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை படத்தில் காணலாம்

களக்காடு அருகே பச்சையாற்றில் மணல் கடத்திய 14 பேர் கைது- 2 லாரிகள் பறிமுதல்

Published On 2018-05-17 08:21 GMT   |   Update On 2018-05-17 08:21 GMT
களக்காடு பகுதியில் பச்சையாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 14 பேரை கைது செய்த போலீசார் 2 லாரியையும் பறிமுதல் செய்தனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள பச்சையாற்றில் இருந்து இரவு நேரங்களில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்தனர்.

இந்த பணியில் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ஜெகநாதன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கீழதேவநல்லூர் பகுதியில் உள்ள பச்சையாற்றில் 2 லாரிகளில் சிலர் ஆற்றுமணலை கடத்த முயன்றனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இருந்த போதிலும் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சிதம்பராபுரத்தை சேர்ந்த சரவணன் (வயது36), சிவசங்கர் (39), செல்வராஜ் (29), முருகன் (33), மதன் (30), கண்ணன் (42), சேதுராயபுரம் கிருஷ்ணகுமார் (35), மாவடி புதூர் சேர்மபாண்டி (34), ராமகிருஷ்ணாபுரம் ராஜேஷ் (34) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் பத்மநேரி பச்சையாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய சிதம்பராபுரத்தை சேர்ந்த முருகன் (37), சேகர் (32), குமார் (35), மணிகண்டன் (27), இப்ராஹிம் ஷா (33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். களக்காடு பகுதியில் போலீசார் நேற்று இரவு மட்டும் நடத்திய அதிரடி சோதனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News