செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

Published On 2018-05-16 06:56 GMT   |   Update On 2018-05-16 06:56 GMT
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
மேட்டூர்:

தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கோடை காலத்தில் அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். இதனால் ஒகேனக்கல் களை கட்டி உள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி 1970 கன அடியாக உயர்ந்தது. அதன் பிறகு நீர்வரத்து குறையத் தொடங்கியது.

நேற்று முன்தினம் 611 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 439 கன அடியாக குறைந்தது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து 748 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று 34.06 அடியாக இருந்தது. இன்று காலை இது 33.85 அடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 11-ந் தேதி இது 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.

காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
Tags:    

Similar News