செய்திகள்

பூந்தமல்லி அருகே ரூ.35 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

Published On 2018-05-03 07:52 GMT   |   Update On 2018-05-03 07:52 GMT
பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.35 கோடி மதிப்புள்ள நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர்.
பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் சி.டி.ஏ. நகரில் அரசுக்கு சொந்தமான 2.74 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர்.

இதையடுத்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பூந்தமல்லி தாசில்தார் ரமா ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைத்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி கூறியதாவது:-

இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம். இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கல்நட்டு வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயன்றனர். அதனை தடுத்து நிறுத்தினோம்.

தற்போது அடிக்கடி ஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த இடத்தை மீட்டு அதனை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட உள்ளது.

இந்த பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் மற்றும் அரசு மருத்துவமனை அமைய உள்ளது. தற்போது மீட்கப்பட்டுள்ள அரசு நிலத்தின் மதிப்பு ரூ.35 கோடி. இந்த இடத்தில் மீண்டும் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ய நினைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News