செய்திகள்

நிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்பு- பேராசிரியர் முருகன் கைது

Published On 2018-04-23 06:08 GMT   |   Update On 2018-04-23 06:08 GMT
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தலைமறைவாக இருந்த காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நிர்மலா தேவியிடம் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 3 பேர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

பல்கலை கழகத்தின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குனர் கலைச்செல்வன், கலை வரலாறு துறை ஆய்வாளர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோருடன் நிர்மலா தேவி தொடர்பில் இருந்தது அம்பலமாகி உள்ளது. இவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.


இந்த நிலையில் பேராசிரியர் கலைச்செல்வன் நேற்று காலையில் விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

நிர்மலா தேவியை பாலியலுக்கு தூண்டியதாக பல்கலைக் கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். கருப்பசாமியின் வீடு திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே உள்ளது. அங்கு போலீசார் அவரை தேடிச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.

கருப்பசாமியின் சொந்த ஊர் திருச்சுழி அருகே உள்ள நாடாகுளம் கிராமமாகும். அங்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்றனர். கருப்பசாமி மனைவி கனகமணியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் இதில் எந்த துப்பும் துலங்கவில்லை.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பேராசிரியர் முருகன் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

நிர்மலாதேவியுடனான தொடர்பு குறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News