செய்திகள்
விதவை பெண்களுக்கு கூழ் ஊற்றி வழிபாடு செய்த காட்சி

வாழப்பாடி அருகே மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு

Published On 2018-04-21 13:04 GMT   |   Update On 2018-04-21 13:04 GMT
வாழப்பாடி அருகே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் அப்பகுதி கிராம மக்கள் மழை வேண்டி விதவை பெண்களுக்கு பூஜை செய்து கூழ் ஊற்றி நூதன வழிபாடு செய்தனர்.
வாழப்பாடி:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து வருவதால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கல்வராயன்மலை, நெய்யமலை, அருநூத்துமலை உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த கிராமங்களை பொறுத்தவரை மழை குறைந்து வறட்சி ஏற்படும் போதெல்லாம் காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் வழிபடுவது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ளது.

இதையடுத்து இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நெய்யமலை கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் பச்சரிசி, கம்பு, சோளம், தினை, வரகு, சாமை போன்ற சிறு தானியங்களில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். பின்னர் அவற்றை கூழாக கரைத்து வயது முதிர்ந்த விதவை பெண்களை அம்மன் சன்னதியில் அமர வைத்து அம்மனுக்கு படைத்த கூழை வழங்கி பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.

மழை வேண்டி நடந்த வினோத வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழிபாடு குறித்து நெய்யமலை கிராம மக்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மழை இல்லை. இதனால் கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலத்தில் பயிர் செய்வதற்கு மட்டுமின்றி குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வருண பகவானை வரவழைக்க முன்னோர்கள் வழக்கப்படி மாரியம்மன் கோவில் வளாகத்தில் பல தானியங்களில் பொங்கல் வைத்து அவற்றை கூழாக கரைத்து பெண்களுக்கு வழங்கி பூஜை செய்து வழிபாடு நடத்துகிறோம்.

இந்த வழிபாட்டினால் இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல மழை பெய்து நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் தீரும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
Tags:    

Similar News