செய்திகள்

பொள்ளாச்சியில் மரக்கடை அதிபர் குத்திக் கொலை

Published On 2018-04-19 10:19 GMT   |   Update On 2018-04-19 10:19 GMT
பொள்ளாச்சியில் மரக்கடை அதிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆறுமுகம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (30). இவரது நண்பர் பொள்ளாச்சி பாஸ்கர் நகரை சேர்ந்த முகம்மது அசாருதீன் (29) .

இருவரும் சேர்ந்து பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார்கள். இருவருக்கும் செல்போன் கடையில் வரும் வருமானத்தை பங்கு பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.மேலும் முகம்மது அசாருதீன், பிரதீப்பிடம் பணம் கேட்டு வந்தார். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு 11.45 மணியளவில் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள சர்.சி.வி. ராமன் வீதிக்கு வந்தனர்.பிரதீப் தனது உறவினரும் பொள்ளாச்சியில் மரக்கடை நடத்தி வரும் தொழில் அதிபருமான கண்ணன் (30) என்பவரை அழைத்து வந்து இருந்தார். அதேபோல் முகமது அசாருதீன் தனது நண்பரும் ஓட்டல் உரிமையாளருமான முகமது இப்ராகிமை அழைத்து வந்திருந்தார். நள்ளிரவு பேச்சு வார்த்தை நடைபெற்ற போது அவர்களுக்குள் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது இப்ராகிம் தான் கொண்டு வந்த கத்தியால் பிரதீப், அவரது உறவினர் கண்ணன் ஆகியோரை குத்தினார்.

இதில் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே பலியானார். பிரதீப் காயம் அடைந்தார். அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து காயத்துடன் போராடி கொண்டிருந்த பிரதீப்பை மீட்டனர். அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொலை செய்யப்பட்ட கண்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை நடந்ததும் முகமது அசாருதீனும், முகம்மது இப்ராகிமும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொலை பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News