செய்திகள்

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றி தான் பணி நியமனம் நடந்ததா? ஐகோர்ட்டு

Published On 2018-04-19 10:13 GMT   |   Update On 2018-04-19 10:13 GMT
சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவன பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்தவர் முனைவர் முரளிதரன். இவர், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரது நியமனம் ஐ.ஐ.டி. விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதை எதிர்த்து முனைவர் முரளிதரன், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேலும், கூடுதலாக மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘ஐ.ஐ.டி. இயக்குனராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தியை நியமித்தது செல்லாது என்று வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை பாஸ்கர் ராமமூர்த்தி நிரப்பி வருகிறார்.

இவரது நியமனமே செல்லாது என்று வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இவர் விதிகளை மீறி பல இடங்களை நிரப்புகிறார். அதுவும், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பேராசிரியர்கள் பதவிகளுக்கு பொது விளம்பரம் எதுவும் கொடுக்காமல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், ஆட்களை நியமித்துள்ளார். எனவே, இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், ‘ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற நியமனத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், மேற்கொண்டுள்ள பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஐ.டி. சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு இடஒதுக்கீட்டு முறையையும், பொது விளம்பரம் கொடுத்தும் நிரப்பப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை, ஐ.ஐ.டி. இயக்குனர் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News