செய்திகள்

பேராசிரியை விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டு தவறானது- தமிழக ஆளுநர் பேட்டி

Published On 2018-04-17 13:27 GMT   |   Update On 2018-04-17 13:27 GMT
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டு தவறானது என்றும், வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும் என்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். #NirmalaDevi #BanwarilalPurohit
சென்னை:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி (வயது46), தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் அழைப்பு விடுத்த ஆடியோ சமீபத்தில் வெளியானது. பூதாகரமாக வெடித்துள்ள இவ்விவகாரத்தில் ஆளுநர் மீதும் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-

கல்வித்துறையில் எந்த தவறும் நடைபெற வில்லை என நான் சொல்லவில்லை. சில தவறுகள் நடந்துள்ளன. கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி யார் என்று எனக்குத் தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் கவலைப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டு தவறானது. வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும்.

பல்கலைக்கழகத்தில் வேந்தருக்குத் தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. வேந்தர் என்பவர் மாநில அரசையோ அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் மீது எந்த புகாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #TNGovernor #BanwarilalPurohit #NirmalaDevi
Tags:    

Similar News