செய்திகள்

சிறைக்கு திரும்பும் சசிகலாவுடன் கே.என்.நேரு திடீர் சந்திப்பு

Published On 2018-03-31 03:15 GMT   |   Update On 2018-03-31 03:44 GMT
கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் வந்துள்ள சசிகலா இன்று பெங்களூர் சிறைக்கு திரும்ப உள்ள நிலையில் அவரை தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தார். #Sasikala #KNNehru #Parole
தஞ்சாவூர்:

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.



இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். சிறை நிர்வாகம் மூன்று நிபந்தனைகளை விதித்து சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவர் பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 20-ந் தேதி மதியம் கார் மூலம் புறப்பட்டு இரவில் தஞ்சைக்கு வந்தார்.

இறுதிச்சடங்கு முடிந்தபிறகு தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்தார். அவரை உறவினர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சசிகலாவின் பரோல் காலம் ஏப்ரல் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், சசிகலா முன்கூட்டியே சிறைக்கு திரும்ப முடிவு செய்தார். அதன்படி, தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சசிகலா, கார் மூலம் பெங்களூரு சிறைக்கு புறப்படுகிறார்.

சசிகலா சிறைக்கு புறப்பட்ட தயாராக இருந்த நிலையில், அவரது வீட்டுக்கு தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  கே.என்.நேரு இன்று காலை சென்றார். சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பரோல் முடிவதற்கு முன்னதாகவே 31-ம் தேதி பெங்களூரு சிறைக்கு சசிகலா திரும்புவார் என்று டிடிவி தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது. #Sasikala #Parole

Tags:    

Similar News