செய்திகள்

இளம்வயது திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2018-03-23 11:35 GMT   |   Update On 2018-03-23 11:35 GMT
தர்மபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில் மாதம் தோறும் ஒருநாள் ஒரு கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

192 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. உடனடியாக 53 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக கிடைத்திட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசு திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம், இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பெண்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கு செய்யும் திட்டங்களால் குடும்பம் மேம்பாடு அடைய முடியும் என்பதை அறிந்து தமிழக அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குழந்தை திருமண செய்வதால் பெண்ணின் உடல் ஆரோக்கியம் மற்றும் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

எனவே 18 வயது பூர்த்தி அடைந்த பின்பு பெற்றோர்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இளம் வயது திருமணம் நடைபெற்றால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களில் கூட்டு பண்ணையம் அமைத்து செயல்பட்டால் உற்பத்தி செலவு குறைவதுடன் சந்தையில் பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடையலாம். 1000 விவசாயிகள் இணைந்து நிறுவனமாக செயல்பட்டு விவசாய பொருட்களிலிருந்து எண்ணெய் தயாரித்தல் போன்ற இதர பொருட்களை உற்பத்தி செய்து வெளியிடங்களில் விற்பனை செய்தால் மானியம் மற்றும் கடன் உதவிகள் அதிகமாக கிடைக்கும். இதனால் விவசாயிகள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மலர்விழி பேசினார்.

முன்னதாக வருவாய்த் துறையின் சார்பில் பிறப்புச்சான்று 4 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 11 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 20 ஆயிரமும், தற்காலிக இயலாமைக்கான மாதாந்திர உதவித்தொகையாக 6 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 78 ஆயிரமும், வாரிசு சான்றிதழ் 3 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 15 பயனாளிகளுக்கு ரூ.79 ஆயிரத்து 500 மதிப்பிலும், பழங்குடியினர் சாதிசான்று 81 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் 6 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.87 ஆயிரத்து 188 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 765 மதிப்பிலும் என ஆக மொத்தம் ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

முகாமில் வருவாய் கோட்டாட்சியர் பத்மாவதி, இணை இயக்குநர் வேளாண்மை சுசிலா, தனித்துணை கலெக்டர் முத்தையன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அமிர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் வைத்தியநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், உதவி இயக்குநர் (கலால்) மல்லிகா, வட்டாட்சியர் பரமேஸ்வரி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News