செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்ட நிஸ்லாவை போலீசார் அழைத்து சென்ற காட்சி

இடமாற்றம் செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியை தர்ணா

Published On 2018-03-20 11:09 GMT   |   Update On 2018-03-20 11:09 GMT
திருப்பத்தூர் அருகே இடைநிலை ஆசிரியை வேறு பள்ளிக்கு தன்னை இடமாற்றம் செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலூர்:

ஆம்பூர் சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஸ்லா (வயது 32), ஆசிரியை. இவர், திருப்பத்தூர் அருகே உள்ள நத்தம் அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர், தன்னை ஆலங்காயம் பள்ளிக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதுதொடர்பாக இடமாற்ற ஆணையை பெற்றுக்கொள்ள அவர் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு, அவரை அதிகாரிகள் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவர் திடீரெனச் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தைக்கேட்டு வந்த பெண் போலீசார், அவரை சமாதானம் செய்தனர். எனினும் அவர் மீண்டும் சத்தம் போட்டார்.

மேலும் அவர் அலுவலகத்தினுள் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தன்னை சோமலாபுரம் பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தனது கோரிக்கையை மாற்றி கூறினார். தொடர்ந்து அவர் சத்தம்போட்டவாறே, அதிகாரிகளையும், போலீசாரையும் வசைபாடினார்.

அதிகாரிகள் அவரிடத்தில் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவரிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறியும், நிஸ்லா தொடர்ந்து அதிக சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென கலெக்டரை சந்திக்க 2-வது மாடிக்கு சென்றார். பின்னால் பெண் போலீசார் ஓடிச் சென்று அவரை தடுத்தனர். அப்போது அவர் தரையில் அமர்ந்து சத்தம் போட்டார். பின்னர் பெண் போலீசார் அவரை குண்டுக்கட்டாக கீழே தூக்கி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவரை சத்து வாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி சமாதானப்படுத்தி, பெண் போலீசார் உதவியுடன் நிஸ்லாவின் ஊருக்கு கொண்டு சென்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News