செய்திகள்

மேற்கு மாம்பலத்தில் முருகன் இட்லி கடைக்கு சீல் - மாநகராட்சி நடவடிக்கை

Published On 2018-03-20 10:14 GMT   |   Update On 2018-03-20 10:14 GMT
மேற்கு மாம்பலத்தில் உரிமம் பெறாமல் இயங்கிய முருகன் இட்லி கடைக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் பிரபலமான முருகன் இட்லி கடை பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. சென்னையிலும் அதன் கிளைகள் இயங்கி வருகின்றன.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா ரோட்டில் செயல்பட்ட முருகன் இட்லி கடை உரிமம் இல்லாமல் இயங்கியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில் உரிய உரிமம் வாங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் உரிமம் பெறுவதற்கான முயற்சிகளில் முருகன் இட்லி கடை நிர்வாகத்தினர் தீவிரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் மேற்கு மாம்பலம் முருகன் இட்லி கடைக்கு சீல் வைத்தனர். தேனாம்பேட்டையில் உள்ள 10-வது மண்டல அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

முருகன் இட்லி கடை செயல்பட்டு வந்த கட்டிடத்துக்கு சரியாக சொத்து வரி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. ரூ.13 லட்சம் வரையில் பாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News