செய்திகள்

சென்னையில் போலீஸ் அதிரடி வேட்டை: ஹெல்மெட் அணியாமல் சென்ற 3½ லட்சம் பேர் சிக்கினர்

Published On 2018-03-20 06:55 GMT   |   Update On 2018-03-20 06:55 GMT
கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 3½ லட்சம் பேர் போலீசில் சிக்கியுள்ளனர். கடந்த 2 மாதங்களில் 55 ஆயிரம் பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
சென்னை:

சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களே அதிக எண்ணிக்கையில் உயிர் இழக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு, ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடிக்கும் போலீசார் அவர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள்.

இதற்காக போக்குவரத்து போலீசார் முக்கிய சாலைகளில் தினமும் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் லட்சக்கணக்கானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 3½ லட்சம் பேர் போலீசில் சிக்கியுள்ளனர். கடந்த 2 மாதங்களில் 55 ஆயிரம் பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) வரையில் தமிழகத்தில் 56 ஆயிரத்து 301 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 25 ஆயிரம் பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து ரூ.3 கோடியே 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் ரூ.27 லட்சத்து 56 ஆயிரம் அபராத தொகை வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் செல்லும் பலரில் சிலர் ஹெல்மெட் வைத்திருப்பார்கள். ஆனால் அதனை தலையில் அணியாமல் பெட்ரோல் டேங்கில் வைத்திருப்பார்கள். அல்லது வண்டியில் தொங்கவிட்டிருப்பார்கள். இதுபோன்று செல்பவர்கள் மீதும் நடவடிக்கை பாய்கிறது. அவர்களை எச்சரித்து அனுப்பாமல் போலீசார் ஹெல்மெட் வழக்கு போடுகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News