செய்திகள்

கண்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு - எண்ணூர் துறைமுகத்தில் மாணவர்கள் முற்றுகை

Published On 2018-03-19 09:03 GMT   |   Update On 2018-03-19 09:03 GMT
எண்ணூரில் கண்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து பாதிப்படைவதால் பள்ளி. கல்லூரி மாணவர்கள் துறைமுக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள 2-வது கேட் வழியாக சரக்குகள் ஏற்றவும் இறக்கவும் கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள் சென்று வருகின்றன.

இந்த லாரிகள் எண்ணூர் துறைமுகம் அருகே மீஞ்சூர் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். கடந்த ஒருவாரமாக ஏராளமான லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.

இதனால் காட்டுப்பள்ளி- மீஞ்சூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இன்று காலையும் மீஞ்சூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி- பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் துறைமுகத்தின் 2-வது வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகளை ஒழுங்குப்படுத்தி நிறுத்த வேண்டும். குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மீஞ்சூர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
Tags:    

Similar News