செய்திகள்

தலைமைச் செயலகத்தில் தகராறு - வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் முன்ஜாமீன் மனு

Published On 2018-03-02 13:29 GMT   |   Update On 2018-03-02 13:29 GMT
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச் செல்வன் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை:

டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் இருவரும் நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளிடம் இன்று புகார் அளிக்கச் சென்றனர். 

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து இருவரும் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று  வலியுறுத்தினர். ஆனால், அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இருவரும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் முறைகேடு நடந்திருப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். 

இதற்கிடையே, வெற்றிவேல் மற்றும் தங்கத்தமிழ்செல்வன் மீது அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கை அடுத்து விரைவில் அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், வெற்றிவேல் தலைமறைவாகியுள்ளார் எனப் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெற்றிவேலின் வீடு, அலுவலகங்களில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து, வெற்றிவேல் மற்றும் தங்கத் தமிழ்ச்செல்வன் இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TamilNews
Tags:    

Similar News