செய்திகள்

புதுச்சேரி கவர்னருக்கு எதிரான வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விசாரிக்க மறுப்பு

Published On 2018-02-23 22:06 GMT   |   Update On 2018-02-23 22:06 GMT
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். இந்த வழக்கை வேறு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் டி.முருகன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘யூனியன் பிரதேசங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அங்கு கவர்னர்கள் தேவையில்லை. புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி, அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார். தேவையில்லாமல் மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடுகிறார். இது அவர் பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதி மொழிக்கு எதிரானது ஆகும்.

அவரது தலையீட்டின் காரணமாக மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை, பசுமை தீர்ப்பாய வழக்கு, அதிகாரிகள் மாற்றம் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், ‘கவர்னர் மாளிகையில் தனிச்செயலாளர் உள்பட 68 ஊழியர்கள் இருந்தும், கூடுதலாக ஊழியர்களை கவர்னர் நியமித்து வருகிறார். எனவே புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை உடனே திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, ‘அலுவல் ரீதியாக மாநில கவர்னர்களை, தலைமை நீதிபதி சந்திக்க நேரிடும். அதனால், புதுச்சேரி மாநில கவர்னருக்கு எதிரான இந்த வழக்கை, நான் (தலைமை நீதிபதி) விசாரித்தால் சரியாக இருக்காது. இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணைக்கு மாற்றுகிறேன்’ என்று கூறினார். #KiranBedi
Tags:    

Similar News