செய்திகள்

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி

Published On 2018-02-23 06:58 GMT   |   Update On 2018-02-24 08:10 GMT
அம்ருதா தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா? என்பதை தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. #Apollo #Jayalalithaa #Amrutha
சென்னை:

ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், அண்ணன் மகள் ஜெ.தீபா இருவரும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி இருவரும் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  

இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்க்கக் கோரி அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப், தினகரன் ஆதரவாளர் வி.ஏ.புகழேந்தி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்றும், விளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் அவரது மகள் என்று கூறி அம்ருதா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.



இந்நிலையில் அம்ருதா தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி மற்றும் உயிரியல் மாதிரிகள் இருக்கிறதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதுதொடர்பாக பதில் அளிக்க அவகாசம் அளிக்கும்படி  அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

அதேசமயம், இந்த வழக்கில் புகழேந்தி மற்றும் ஜோசப் ஆகியோரை மனுதாரராக சேர்ப்பதற்கு அரசுத் தரப்பிலும் அம்ருதா தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா முதல்வராக இருந்ததால் அவரது புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடாது என்றும், தேவையில்லாமல் குடும்ப பிரச்சனையில் நீங்கள் ஏன் இணைப்பு மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியது. #Apollo #Jayalalithaa #Amrutha #tamilnews

Tags:    

Similar News