செய்திகள்

என்னை சிக்க வைக்க சதி- தீபாவின் கணவர் மாதவன் ஆவேசம்

Published On 2018-02-20 05:34 GMT   |   Update On 2018-02-20 05:34 GMT
ஏதாவது ஒரு வி‌ஷயத்தில் என்னை சிக்க வைக்க பலர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று தீபாவின் கணவர் மாதவன் கூறியுள்ளார்.
சென்னை:

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வசித்து வரும் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள வீட்டில் போலி வருமானவரி துறை அதிகாரியாக நடித்த பிரபாகரன் என்ற வாலிபர் கடந்த வாரம் பிடிபட்டார்.

போலீஸ் பிடியில் சிக்கியதும் பிரபாகரன் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீபாவின் கணவர் மாதவன் தூண்டுதலின் பேரிலேயே போலி அதிகாரியாக நடித்ததாகவும், அதற்கான அடையாள அட்டையை மாதவனே தயாரித்து கொரியரில் அனுப்பி வைத்தார் என்றும் பிரபாகரன் அளித்த வீடியோ வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாதவன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் மறுநாளே போலி அதிகாரி பிரபாகரன் திடீரென பல்டி அடித்தார். மாதவன் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், பங்கு சந்தையில் முதலீடு செய்ததில் ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் இருந்து மீள்வதற்கே தீபாவை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டேன் என்றும் அதிரடியாக மாற்றிப் பேசினார். இதன் காரணமாக மாதவன் மீதான நடவடிக்கையை போலீசார் கைவிட்டனர்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் மாதவன் எதுவும் கூறாமலேயே இருந்தார். இதனால் குழப்பமான சூழ்நிலையே நிலவியது.

இந்த நிலையில் மாதவன் நேற்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை திடீரென சந்தித்து பேசினார். அப்போது போலி அதிகாரி விவகாரத்தில் தன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போதிலும் உண்மையிலேயே நடந்தது என்ன? என்பதை உரிய முறையில் விசாரித்து வெளிக்கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தீபா பேரவையில் நடக்கும் குழப்பத்தை பயன்படுத்தி போலி அதிகாரியாக நடித்த நபர் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். தொலைக்காட்சிகளில் வெளியான தீபா பேரவை செய்தியை பார்த்தே தனக்கு பணம் பறிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டதாக பிரபாகரன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


போலீஸ் கமி‌ஷனரை சந்தித்த போது நான் எந்த மனுவையும் கொடுக்க வில்லை. நன்றி சொல்வதற்காக நேரில் பார்த்தேன். கைது செய்யப்பட்ட நபருக்கு என்மீது எந்தவிதமான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இருப்பதாக நினைக்கவில்லை. அதுபோன்று அவர் எண்ணி இருந்தால் என்னைப்பற்றி கூறியதை அப்படியே திரும்பவும் சொல்லி இருப்பார்.

நான் புதுச்சேரிக்கு சென்று 3 ஆண்டுகள் ஆகிறது. போலி அதிகாரியாக நடித்தவரை நான் பார்த்ததே இல்லை. அவர் சரண் அடையும் முன்னர் ஏற்கனவே பேசி எடுத்து வந்த வீடியோவைத்தான் உங்களிடம் (பத்திரிகையாளர்களிடம்) கொடுத்துள்ளார். எந்த அடிப்படையில் அதுபோன்ற தவறான செய்தியை வெளியிட்டீர்கள் என்று தெரியவில்லை. கைதான நபருக்கு கூரியரில் அடையாள அட்டையை நான் அனுப்பவில்லை.

அவரிடம் போனில் பேசவில்லை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். நீங்கள் கூறுவது போல நான் தலைமறைவாகவில்லை. இங்கேதான் இருந்தேன். திடீரென ஒருவர் என்மீது குற்றச்சாட்டுகளை கூறியதும் குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டேன். அதன் காரணமாகவே எதுவும் பேசாமல் பொறுமை காத்தேன்.

ஏதாவது ஒரு வி‌ஷயத்தில் என்னை சிக்க வைக்க பலர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். இதிலும் அதுபோன்று எதுவும் நடந்திருக்கலாம் என்றே நான் சந்தேகிக்கிறேன். கைது செய்யப்பட்ட நபர் பேசிய வீடியோவை போலீசார் வெளியிடாத பட்சத்தில் உண்மை இல்லாத ஒரு செய்தியை நீங்கள் திரும்ப திரும்ப தொலைக்காட்சிகளில் நேரலையில் காட்டியதுதான் கஷ்டமாக இருந்தது.

கே:- உங்களது மனைவி தீபா அளித்த ஒரு பேட்டியில் 4 நாட்களாக உங்களை காணவில்லை என்று கூறி இருக்கிறாரே?

ப:- அதுபற்றி அவரிடம் போய்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

கே:- போலி அதிகாரி விவகாரத்தின் பின்னணியில் தீபா இருப்பதாக நினைக்கிறீர்களா?

ப:- போலீசார் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே?

இவ்வாறு மாதவன் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News