செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை

Published On 2018-02-18 08:05 GMT   |   Update On 2018-02-18 08:05 GMT
மத்திய அரசை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan #CauveryWater #CauveryVerdict
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 192 டிஎம்சி தண்ணீரின் அளவானது 177.25 டிஎம்சி தண்ணீராக குறைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதாக இல்லை.

இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி தமிழகத்துக்கு உரிய காவிரி நதிநீரை உடனடியாக பெற வேண்டிய கட்டாய நிலையில் தமிழக அரசு இருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி தீர்ப்பு வெளி வந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே கர்நாடக முதல்வர் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை எதிர்க்கும் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

கர்நாடக அரசு தடையாக இருக்குமேயானால் உடனடியாக தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை கூட்டி, அனைவரின் சார்பில் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு. பிரதமரை சந்தித்து காவிரி நதிநீர் பெறுவதற்கு அழுத்தம் கொடுத்து பேச வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசு இனியாவது இப்பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து செயல்பட வலியுறுத்த வேண்டும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தொடர்ந்து பெற தொடர் நடவடிக்கைகளை இப்போதிருந்தே மேற்கொண்டு தமிழக விவசாயிகளையும், பொது மக்களையும் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #CauveryWater #CauveryVerdict 
Tags:    

Similar News