செய்திகள்

புதிய கட்சி தொடக்க விழாவை எளிமையாக நடத்த விரும்பும் கமல்

Published On 2018-02-18 07:49 GMT   |   Update On 2018-02-18 07:49 GMT
புதிய கட்சி தொடக்க விழாவை மதுரையில் மிக எளிமையான முறையில் நடத்த விரும்புவதாக நடிகர் கமல்ஹசான் தெரிவித்துள்ளார். #KamalHaasan
சென்னை:

தமிழக அரசியல் களத்திற்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார். அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார்.

21-ந்தேதி (புதன்கிழமை) காலை ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை மற்றும் மதுரையில் 4 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இதில் மதுரையில் 21-ந்தேதி மாலை நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த கூட்டத்தை அரசியல் கட்சி தொடக்க விழா மாநாடு போல நடத்த கமல்ஹாசனின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி தொண்டர்களை திரட்டும் ஏற்பாடுகளையும் அவர்கள் ஓசையின்றி செய்து வருகிறார்கள்.

கமல்ஹாசனுக்கு ஏற்கனவே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நற்பணி மன்ற ரசிகர்கள் உள்ளனர். சமீப காலமாக புதிய உறுப்பினர்களும் அவரது கட்சியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் லட்சக்கணக்கான தொண்டர்களை மதுரையில் திரள வைக்க முடியும் என்று கமல் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் நம்புகிறார்கள். எனவே 21-ந்தேதி கமல் கட்சி பெயரை வெளியிடும் போது லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பார்கள் என்று தெரிகிறது.

ரசிகர்கள் எண்ணம் இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் விருப்பம் வேறு வகையில் உள்ளது. அவர் கட்சி தொடக்க விழாவை மதுரையில் மிக மிக எளிமையாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். எனவே புதிய கட்சி குறித்து அதிக அளவில் விளம்பரம் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக மதுரையில் பேனர்கள் வைக்க கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளார். தனது உருவம் கொண்ட கட்-அவுட்கள் வைக்கவும் அவர் தடைவிதித்துள்ளார்.

பேனர், கட்-அவுட் வைத்தால் அது பொது மக்களுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்று கமல் அறிவுறுத்தியுள்ளார். அதிக அளவில் தொண்டர்கள் திரண்டால் அது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடக்கூடும் என்று கமல்ஹாசன் கருதுகிறார்.

இது தொடர்பாக அவர் தனது நிர்வாகிகளிடம், ‘‘மற்ற அரசியல் கட்சிகளை போல நாம் செயல்படக்கூடாது. நமது செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்க வேண்டும். பொது மக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்ள கூடாது’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தொடக்க விழாவிற்கு தொண்டர்களை திரட்டுவதை விட கட்சி பணியாற்ற முக்கியத்துவம் கொடுக்கும்படி அவர் கூறி வருகிறார்.

கமல் ரசிகர்களில் பெரும்பாலானாவர்கள் ஏற்கனவே நற்பணி மன்றம் மூலம் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து அதை செய்ய வேண்டும் என்றும் கமல் வலியுறுத்தியுள்ளார்.

தேவையில்லாமல் மதுரைக்கு நிறைய பேரை அழைக்க வேண்டாம் என்றும் கமல்ஹாசன் தனது கட்சி மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

என்றாலும், மதுரையில் கமல் கட்சி விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதுபற்றி மதுரை மாவட்ட இயக்க பொறுப்பாளர் அழகர் கூறுகையில், ‘‘மதுரை மண்ணுக்கு வருகை தரும் கமல்ஹாசனுக்கு மக்கள் வியப்படையும் வகையில் சிலம்பம், தாரைதப்பட்டை, மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்படும். ஆனால் தொண்டர்கள் கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் வரவேற்பு அளிப்பார்கள்’’ என்றார். #KamalHaasan #Kamal
Tags:    

Similar News