செய்திகள்

பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.1000 பஸ் பாஸ் விற்பனை அதிகரிப்பு

Published On 2018-02-18 07:23 GMT   |   Update On 2018-02-18 07:23 GMT
பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.1000 பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாததால் அதை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. மாநகர சாதாரண பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சமாக ரூ.24 ஆகவும், விரைவு பேருந்தில் அதிகபட்சமாக ரூ.36, சொகுசு பேருந்தில் அதிகபட்சமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் 3,800-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகரம், புறநகர் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மாதாந்திர பஸ் பாஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.1000 பாஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதில் எந்த மாற்றமும் செய்யாததால் அதை வாங்குவதற்கு பயணிகள் ஆர்வம் காட்டினார்கள்.

ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பஸ்களில் செல்வோருக்கு ரூ.1000 பாஸ் பெரிதும் உதவியாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

இதன்மூலம் தங்களது அன்றாட செலவு குறையும் என்று கருதியதால் ரூ.1000 பாஸ் விற்பனை அதிகரித்து உள்ளது. இந்த 1000 ரூபாய் பாஸ் ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விநியோகம் செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ரூ.1000 பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாததால் அதை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்றனர்.

பஸ் கட்டணம் உயர்வு அறிவித்தபோது கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து உயர்த்தப்பட்ட கட்டணத்தில் சிறிதளவு குறைக்கப்பட்டது.

மேலும் விரைவு பேருந்துகள் குறைக்கப்பட்டு சாதாரண கட்டண பஸ்கள் அதிகளவு இயக்கப்பட்டன. விரைவு பேருந்து பலகையில் வெள்ளை தாள்களை ஒட்டி சாதாரண கட்டண பஸ்களாக இயக்கப்பட்டன.

இந்த நிலையில் சாதாரண கட்டண பஸ்கள் குறைக்கப்பட்டு விரைவு பேருந்துகள் மீண்டும் அதிக அளவுகள் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக பயணிகள் கூறுகையில், “சாதாரண கட்டண பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. விரைவு பேருந்துகள்தான் அதிகளவு வருகின்றன” என்றனர்.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் சாதாரண கட்டண பஸ்களை குறைத்து இயக்கக் கூடாது என்று கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இது தொடர்பாக பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #tamilnews

Tags:    

Similar News