செய்திகள்

பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? - தமிழக அரசு விளக்கம்

Published On 2018-02-13 03:11 GMT   |   Update On 2018-02-13 03:11 GMT
பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பதிவுத்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை கொண்டுவரும் இத்திட்டத்தின் மூலம் 575 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி வசதிகளுடன் கூடிய மூன்று இணையதள தொடர்பு வசதிகள் கொடுக்கப்பட்டு, மாநில தகவல் தரவு மையத்துடனும், புனேயில் உள்ள பேரிடர் மீட்பு தரவு மையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டிய ஆதாரங்களை முன்பே அனுப்பி சரிபார்க்கும் முறை முதல், ஒரே வருகையில் ஆவணங்களை பதிவு செய்து உடனுக்குடன் வழங்கும் வசதி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஆவணப்பதிவு தொடர்பான எல்லா சேவைகளும் கணினி வழியாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால், பொதுமக்கள் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லவேண்டியது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்சரிபார்ப்பு என்ற புதிய முறை நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சரிபார்த்த பின் ஆவணம் பதிவு செய்யும் நாள் மற்றும் நேரத்தை முன்னரே இணையவழி பதிவு செய்து அந்த நாளில் ஆவணப்பதிவை மேற்கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு பதிவு சேவைகளின் நிலை குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் உடனுக்குடன் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது இணையவழி பட்டாமாறுதல் வசதி கிராம புல எண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை விரைவில் நத்தம் மற்றும் நகரபுல எண்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

புதிய வசதியால் வில்லங்கச்சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவணநகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆவணப் பதிவின்போது மோசடி பத்திரப்பதிவுகளை குறைக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சொத்தின் உரிமையாளரின் கைரேகையை ஒப்பீடு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஆள்மாறாட்டங்கள் பெரும் அளவில் தவிர்க்கப்படும்.

இணையவழி கட்டணங்களை செலுத்தும் முறை மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தற்போதுள்ள 6 வங்கிகளுடன் மேலும் 5 வங்கிகளை சேர்த்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாரத மாநில வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, அலகாபாத் வங்கி, ஐடிபிஐ வங்கி, சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா வங்கி ஆகிய 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தற்போது அனைத்து கட்டணங்களையும் செலுத்தலாம்.

இதுமட்டுமின்றி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174-ல் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இச்சேவைகள் குறித்த விவரங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #tamilnews
Tags:    

Similar News