செய்திகள்

பெங்களூருவில் நாதுராம் கூட்டாளியிடம் 1 கிலோ நகைகள் மீட்பு

Published On 2018-02-05 03:26 GMT   |   Update On 2018-02-05 03:26 GMT
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நாதுராமை பெங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது நாதுராமின் கூட்டாளியிடம் இருந்து ஒரு கிலோ நகைகள் மீட்கப்பட்டன.
சென்னை:

சென்னை கொளத்தூர் நகைக் கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளியான நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளான பக்தாராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விசாரணையின்போது நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளை பெங்களூருவில் உள்ள அடகு கடைகளில் விற்று விட்டதாக நாதுராம் கூறினார். இதனையடுத்து அந்த நகைகளை மீட்பதற்காக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை தமிழக போலீசார் பெங்களூரு அழைத்து சென்றனர்.

பின்னர் நாதுராம் கூறிய அடகு கடைகள் மற்றும் சில இடங்களில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது சென்னை போலீசாருக்கு கர்நாடக போலீசார் உதவி செய்தனர். முடிவில் நாதுராமுக்கு உதவி செய்த அவனது கூட்டாளி ராம்லால் என்பவரை போலீசார் கைது செய்தனர். நகை வியாபாரியான அவரிடம் இருந்து 1 கிலோ தங்கநகைகள் மீட்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்தனர். சென்னை அரும்பாக்கத்தில் வைத்து மாதவரம் துணை கமிஷனர் சுதாகர் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News