செய்திகள்

குட்கா விவகாரம் விஸ்வரூபம்: சி.பி.ஐ. விசாரணைக்கு வாய்ப்பு

Published On 2018-01-24 06:42 GMT   |   Update On 2018-01-24 06:42 GMT
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீதான குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #GutkaScam

சென்னை:

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீதான குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோரது முன்னிலையில் வழக்கு விசாரணை நேற்று நடந்தது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜ கோபாலன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மத்திய அரசு வக்கீலான ராஜகோபாலன் கூறும் போது, குட்கா விவகாரம் தொடர்பாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதப்பட்ட ரகசிய கடிதம் போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது என்றும், குட்கா வியாபாரி மாதவராவ், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் கொடுத்தது குறித்தும் வருமான வரித்துறை ஏற்கனவே பதில் மனுதாக்கல் செய்துள்ளது என்றார்.

மனுதாரரின் வக்கீலான வில்சன் கூறும்போது, இந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபற்றி போலீசில் புகார் அளிக்க முடியவில்லை என்றார்.

இதனை கேட்ட நீதிபதிகள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் இளைய தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட ஒரு பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து வக்கீல் வில்சன் கூறும்போது, புகையிலை பொருட்கள் தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்துக்கு வரும் புகையிலை பொருட்களை தயாரிக்க டெல்லியில்தான் மூலப்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர், டி.ஜி.பி., உயர் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு உள்ளது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையின் கீழ்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவேதான் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறோம் என்றார். இதில் ஹவாலா பணம் கைமாறி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோருவதை தமிழக அரசு ஏன் கடுமையாக எதிர்க்கிறது என்றும் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன், புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 4,870 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது என்றார்.

குட்கா முறைகேடு தொடர்பாக வெளிமாநிலங்களுக்கு சென்று தமிழக போலீசார் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வருமானவரி துறையினரிடம் கேட்டுள்ளோம். ஆனால் அவற்றை தருவதற்கு வருமானவரி துறையினர் தயங்குகின்றனர். விசாரணை முடிவே தெரியாமல் சி.பி.ஐ. விசாரணை கோரக்கூடாது. இந்த விவகாரத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவும் தயாராக உள்ளோம் என்றார்.

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றும் முன்னர் தமிழக அரசிடமும் அது தொடர்பாக கருத்துக்களை பெற வேண்டியது அவசியம் என்றார். பின்னர் தமிழக அரசின் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ரகசிய அறிக்கை ஒன்றையும் அரசு வக்கீல் தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வில்சன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதப்பட்ட கடிதம் சசிகலாவின் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வக்கீல் விஜய் நாராயணன், டி.ஜி.பி. கடிதம் எழுதிய சில தினங்களிலேயே ஜெயலலிதா இறந்து விட்டார். இதன் பின்னர் அவர் வசித்த இல்லத்தில் பலர் வசித்தனர் என்றார்.

குட்கா ஊழல் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ள தி.மு.க. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் தொடர்ந்து வாதாடி வருகிறது. அதே நேரத்தில் தமிழக அரசோ, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையை ரகசிய அறிக்கையாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. அப்போது குட்கா விவகாரத்தில் அடுத்தது என்ன? என்பது தெரியவரும். குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது போன்று உத்தரவிடப்பட்டால், ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அனைவரும் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். அது போன்று ஒரு சூழல் ஏற்பட்டால் அது தமிழக அரசுக்கு திடீர் நெருக்கடியாகவே அமையும்.  #Gutkascam #tamilnews

Tags:    

Similar News