செய்திகள்

சசிகலாவின் கோரிக்கையை ஏற்றால் விசாரணை முடிவடைய 15 ஆண்டுகள் ஆகிவிடும்: ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி

Published On 2018-01-23 03:58 GMT   |   Update On 2018-01-23 03:58 GMT
சசிகலாவின் கோரிக்கையை ஏற்றால் விசாரணை முடிவடைய 15 ஆண்டுகள் ஆகிவிடும் என்று விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தனக்கு எதிரான புகார் மற்றும் சாட்சியங்களை அளிக்க வேண்டும், அதன்பின்பு குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கையை ஏற்றால் விசாரணை முடிவடைய 15 ஆண்டுகள் ஆகிவிடும் என்று விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த மாதம் 21-ந் தேதி சசிகலாவுக்கு ஒரு சம்மன் அனுப்பியது.

அதில், தங்களுக்கு(சசிகலாவுக்கு) எதிராக பலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்து இருப்பதால் அதற்கு நேரிலோ, வக்கீல் மூலமோ ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி வரை தனக்கு எதிராக புகார் மற்றும் சாட்சியம் அளித்தவர்கள் யார் யார் என்ற விவரத்தையும், அவர்கள் அளித்துள்ள புகார் மற்றும் சாட்சியத்தின் நகலையும் அளிக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சசிகலா தனது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் மூலம் கடந்த 5-ந் தேதி ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நிலுவையில் இருக்கும்போதே 12-ந் தேதி சசிகலா தரப்பில் புதிதாக ஒரு மனு ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த மாதம் 21-ந் தேதிக்கு பிறகும் தனக்கு எதிராக பலர் சாட்சியம் அளித்து இருப்பது தெரியவருவதால் அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்த பின்பு தனக்கு எதிராக புகார் மற்றும் சாட்சியம் அளித்த அனைவரின் விவரங்களையும், ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என்றும், அதன்பின்பு சம்பந்தப்பட்ட நபர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது ஆணையத்தில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், ‘புதுச்சேரி கவர்னராக இருந்து வரும் கிரண்பேடி ஐ.பி.எஸ். அதிகாரியாக டெல்லியில் இருந்த போது வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது போலீசார் தடியடி நடத்தி வக்கீல்கள் சிலரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையம் அனுப்பிய சம்மன் தொடர்பாக சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்த பின்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க அவர்கள் மீது யார் யாரெல்லாம் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்களோ அந்த விவரங்களை ஆணையம் அளிக்க வேண்டும் என்றும், அதன்பின்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் புகார் கூறியவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக வாதாடினார். மேலும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகலையும் அவர் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதி, இதுபோன்று ஒவ்வொரு ஆவணங்களையும் கொடுத்து குறுக்கு விசாரணைக்கு அனுமதித்தால் ஆணையத்தின் விசாரணை முடிவடைய 15 ஆண்டுகள் ஆகி விடும் என்று கூறினார். இதன்பின்பு, மனு மீதான விசாரணையை 25-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் சசிகலாவின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது தெரியவரும்.

விசாரணை ஆணையம் அமைப்பதற்கு முன்பாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சுங்கத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவர் எழுப்பி இருந்தார்.

இதைதொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் அவர் ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏற்கனவே அவர் எழுப்பி இருந்த சந்தேகங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை நீதிபதி அவரிடம் கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். மதியம் 12.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. #tamilnews
Tags:    

Similar News